கொரோனா தொற்றின் 2ம் அலையால், பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், கண்ணுக்குத்தெரியாத எதிரியை அழிக்கும் ஆயுதம் முகக்கவசம், பாதுகாப்பு இடைவெளி ஆகியவைதான் என தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான போரில், நம்மை பாதுகாக்கும் ஒரே கேடயம் தடுப்பூசி மட்டுமே எனக் கூறினார். இந்தியாவில் தற்போது நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும் என உறுதியளித்தார். நாடு முழுவதும் 23 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தும் வேகம் 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.
இந்தியாவில் மேலும் 3 புதிய கொரேனா தடுப்பூசி பரிசோதனையில் உள்ளதாகவும், மூக்கின் வழியே சொட்டு மருந்து போல் செலுத்தக்கூடிய தடுப்பூசி மருந்தும் ஆய்வில் இருப்பதாகவும் கூறினார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டணமில்லாமல் தடுப்பூசி செலுத்தும் வகையில், ஜூன் 21 முதல், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் என அறிவித்தார். மாநில அரசுகள் தடுப்பூசி கொள்முதல் செய்யத் தேவையில்லை எனக் கூறினார். மொத்த தடுப்பூசி உற்பத்தியில் 75 சதவீதம் மத்திய அரசு வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கும் எனவும், 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
தடுப்பூசி உற்பத்திக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கிவரும் வேளையில், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகள் இறக்குமதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். தனியார் மருத்தவமனைகள் கொரோனா தடுப்பூசிக்கு 150 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கூறினார். 80 கோடி மக்கள் பயனடையும் வகையில் தீபாவளி வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.