மூத்தகுடிமக்களுக்கான கட்டணமில்லா டோக்கன் நாளை முதல் விநியோகம்!

மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள், நாளை முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,கடந்த 2016-ம் ஆண்டு மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை புரட்சித் தலைவி ஜெயலலிதா துவக்கி வைத்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி வரை ஏறத்தாழ 3 லட்சத்து 51 ஆயிரத்து 617 நபர்கள் பயனடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயணச்சீட்டினை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தகுதி வாய்ந்த மூத்த குடிமக்கள், ஆவணங்களை சமர்ப்பித்து நாளை முதல் அருகாமையில் உள்ள மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக விண்ணப்பங்களை கழக வலைத்தள முகவரியான www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version