மே 1ம் தேதி முதல் இலவச கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களில் 13 சதவீத பேருக்கும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 18 சதவீத பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இப்பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 1ம் தேதி முதல் நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதற்கான செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றும், தேவைக்கு ஏற்ப RT-PCR பரிசோதனை அதிகரிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோய் பரவலுக்கு ஏற்ப மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்கவும், மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Exit mobile version