அரசின் இலவசங்களை தரக்குறைவாக பேசுபவர்களுக்கு தெரியுமா? இது

மாணவர்களின் கணினி அறிவியல் அறிவை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில், அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி மற்றும் அதற்கான கைப்பைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைப்பிள்ளைகளுக்கு கனவாக இருந்த மடிக்கணினி இன்று அவர்கள் மடியில் தவழ்ந்து விளையாடி, மாணவர்களின் படிப்பிற்கு எவ்வளவு உதவியாக இருக்கின்றது.

கணினி மையத்திலும், நண்பர்களிடம் கையேந்தியும்தான் கணினியை பயன்படுத்த முடிந்தது. இன்று இலவசம் என நகையாடுகிற அரசாங்க மடிக்கணினியில் தான் பாடங்கள், நூல்களை படிப்பதற்காக பயன்படுத்துகின்றனர் மாணவர்கள். மேலும் தொழில்நுட்பத்தில் வசதிபடைத்த மாணவர்களுடன் போட்டியும் போட்டு வெற்றி அடைய முடிகிறது.

அதுமட்டுமா ஒன்றாம் வகுப்பு முதல் பயிலும் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணி, கணித உபகரணப் பெட்டி என கல்விக்கான அனைத்தையும் இலவசமாக்கினார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.

ஒவ்வொரு நகர்வுக்கும் ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டிய வேதனையிலிருந்து விடுதலை தந்த அரிய முன்னெடுப்பு மிதிவண்டிகள். இதனால் மாணவிகள் யார் உதவியுமின்றி தங்கள் சொந்த கால்களில் பள்ளி செல்ல முடிந்தது. உச்சிவெயில் தெரியாமல் உல்லாச மகிழுந்துகளில் வலம் வருகிறவர்களுக்கு இவை வெகுமக்கள் மயக்குத் திட்டங்களாக மட்டுமே தெரியும்.

வீட்டில் எரியும் அடுப்பு ஒரு புறம், வெயிலின் வெப்பத்தை அப்படியே வீட்டிற்குள் அனுப்பும் மேற்கூரை ஒரு புறம். வெப்பத்தில் நிம்மதியாக உறங்க கூட முடியாமல் தவித்த மக்களுக்கு, இலவச மின்விசிறி தான் காற்றோட்டமான உறக்கத்தை தந்தது. இவற்றை ‘ஓசி’ எனக் கொச்சைப்படுத்துபவர்களுக்கு எப்படி தெரியும்? அவர்கள் மிகவும் சௌகரியமாக குளு குளு வசதியில் அல்லவா இருக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு முடித்தால் திருமண உதவித்தொகை என்பதால் கல்வி பெற்ற பெண்கள் பலருண்டு. வயிறு காயாமல் இருக்கப் பள்ளி நோக்கி வரவைத்தது இலவச மதிய உணவுத் திட்டம்தான்.

அதே வரிசையில் இலவச, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. ஒன்றே முக்கால் கோடி‌ ரேஷன் கார்டுகளுக்கு இந்தப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.

ஏழை பெண்களுக்கு திருமண உதவி, தாலிக்குத் தங்கம் மட்டுமின்றி, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு திட்டம், பிரசவ கால நிதியுதவி மற்றும் மகப்பேறு பெறும்போது தாய்க்கும், சேய்க்கும் சஞ்சீவி மருந்து உள்ளிட்ட 16 விதமான இலவசப் பொருட்கள் வழங்கும் திட்டமும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவானதாகும்.

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் நடக்கும் அம்மாவின் அரசு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை அப்படியே செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். இலவசங்களை கொச்சை படுத்துபவர்களுக்கு தமிழகத்தின் வரலாறு தெரிந்திருந்தால் இப்படி பேசுவதற்கு வாய்ப்பிருக்காது.

 

Exit mobile version