பேராசையால், சதுரங்கவேட்டையார்களிடம் சிக்கி சின்னாபின்னமான வியாபார காந்தம்

90 லட்சம் ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் தருவதாக பேராசை காட்டி, தொழிலதிபரிடம் நூதன மோசடியில் ஈடுபட்டு பணத்தை சுருட்டிய தரகு கும்பலை போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் முகமது. இவரும், கோவையை சேர்ந்த சாய்கிருஷ்ணா என்பவரும் கொடுக்கல் வாங்கல் மூலமாக குளோஸ் ஆகி உள்ளனர்.

இந்த நிலையில், முகமதுவை போதை விருந்தில் சந்தித்த அந்த கோவை நட்பு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் தடை செய்யப்போவதாக பேய்க் கதை ஓட்டியுள்ளது.

தன்னிடம் கட்டுக் கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கறுப்புபணம் இருப்பதாகவும், 90 லட்சம் மதிப்பில் 500 ரூபாய் நோட்டுகள் யாராவது அளித்தால், 1 கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தருவதாகவும் சதுரங்க வேட்டை நடத்தியுள்ளார் சாய்கிருஷ்ணா.

பார்ட்டியை அழைத்து வருபவர்களுக்கு 2 சதவீதம் கமிஷனாக 2 லட்சம் ரூபாய் தருவதாகவும் முகமதுவின் ஆசைக்கு ஆடை கட்டினார்.

சாய்கிருஷ்ணாவின் சதியை, அறியாத அப்பாவி முகமது, 2 ஆயிரம் ரூபாய் பேய்க்கதையை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் தனது நண்பரான அசோகனிடம் கூறி பிரமிக்க வைத்துள்ளார். 2 ஆயிரம் ரூபாய் எப்படி செல்லாமல் போகும் என சாய்கிருஷ்ணாவை எள்ளிய நகையாடிய நண்பர் இருவரும், காற்றுள்ள போதே தூற்றி விட வேண்டியதுதான் என கனவுக் கோட்டை கட்டினர்.

அதன்படி இருவரும் 45 லட்சம் ரூபாய் பணத்துடன் வேலூர் வந்திறங்கி சாய்கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர். தானாக வந்து சிக்கி கொண்ட ஆடுகளை எண்ணி தனக்குள்ளேயே சிரித்து கொண்ட அவர் ஜுலை 1 ம் தேதி காலை சித்தூர் – வேலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பணத்தை மாற்றி கொள்ளலாம் என தெரிவித்தார்.

போலீஸ் வேடமிட்ட தனது கூட்டாளிகளை தெருமுனையில் நிறுத்திவிட்டு இருவரையும் திட்டமிட்ட இடத்தில் சந்தித்தார் சதுரங்க வேட்டை சாய்கிருஷ்ணா.

அப்போது பேசி வைத்த படி போலீஸ் ஜீப்பில் இருந்த போலி காவல்கள் சைரனை ஒலிக்க விட்ட படி வர தொடங்கினர். இதையடுத்து போலீஸ் வருகிறது… போலீஸ் வருகிறது என பதற்றத்தை விதைத்து அசோகன் கையில் இருந்த 45 லட்சம் ரூபாயை பறித்து கொண்டு அதே போலீஸ் ஜீப்பில் ஏறி கம்பி நீட்டினார் சாய்கிருஷ்ணா.

பேராசையால் பணத்தை இழந்த அசோகன், அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சித்தூர் சாலையில் காரில் சுற்றிக் கொண்டிருந்த 9 பேர் கொண்ட நூதன மோசடி கும்பலை, வளைத்து பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 வாகனங்கள், 2 துப்பாக்கிகள், 2 லட்டிகள், 9 செல்போன்கள் மற்றும் 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேர்மையான வழியில் பணம் ஈட்ட எண்ணாமல் குறுக்கி வழியில் பணம் ஈட்ட எண்ணும் பேராசை காரர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம்.

Exit mobile version