பயன்படுத்திய பழைய பொருட்களை சந்தைகளில் விற்க மக்கள் அணுகும் ஓ.எல்.எக்ஸ்., குவிக்கர் போன்ற விற்பனைத் தளங்களைக் கொண்டு மோசடி செய்யும் ஒரு புதிய கும்பல் நாடெங்கும் உருவாகி உள்ளது.
படித்த, வசதியான விற்பனையாளர்களைக் குறிவைத்து, ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் இவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். எப்படி நடக்கிறது இந்தத் திருட்டு? ஓ.எல்.எக்ஸ்., குவிக்கர் போன்ற விற்பனைத் தளங்களில், உங்கள் பழைய பொருட்களின் படங்களை நீங்கள் பதிவேற்றம் செய்த பின்னர் இந்த மோசடியாளர்கள் உங்களை அழைப்பார்கள். இவர்கள் அதிகம் பேரம் பேச மாட்டார்கள், நீங்கள் எதிர்பார்ப்பதைவிடவும் அதிக பணத்தை தருவதாகச் சொல்வார்கள்.
அப்போதே நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கை அடைவது நலம். விற்பனை தொடர்பாக மீண்டும் பேச நேர்ந்தால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எண்ணில் இருந்து அழைப்பவர்களிடமும் கவனமாக இருக்கவும். விரைவிலேயே பொருளை வாங்கிக் கொள்ள சம்மதிக்கும் இவர்கள், பணத்தை அனுப்ப்பிவைக்க உங்களிடம் கூகுள் பே, பேடிஎம் – போன்ற யூபிஐ ஆப்கள் உள்ளனவா என்று கேட்பார்கள்.
இருக்கிறது என்றால் உடனே பேமெண்ட் செய்வதாகவும், ஓடிபி வந்தால் தனக்குச் சொல்ல வேண்டும் என்றும் சொல்வார்கள். இங்குதான் மோசடி தொடங்குகிறது. யூபிஐ ஆப்-களில் இரண்டு வித ஆப்ஷன்கள் உள்ளன. பணத்தை அனுப்ப உள்ளவர்கள் ‘டிரான்ஸ்ஃபரிங் மனி’ – என்ற ஆப்ஷனைத்தான் பயன்படுத்த வேண்டும். பணத்தைப் பெற உள்ளவர்கள்தான் ‘ரிக்வெஸ்ட் மனி’ ஆப்ஷனைத்தான் பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்கு பணத்தை அனுப்புவதாகச் சொன்னவர், ‘டிரான்ஸ்ஃபரிங் மனி’ ஆப்ஷனுக்கு பதிலாக ‘ரிக்வெஸ்ட் மனி’ ஆப்ஷனை கிளிக் செய்வார், அப்போது உங்களுக்கு வரும் குறுஞ்செய்தியில் ‘ரிக்வெஸ்ட் மனி ஆப்ஷனை ஏற்கிறீர்களா? ’ – என்ற கேள்வி இருக்கும். இதை சரியாகப் பார்க்காமல் நீங்கள் ஓகே கொடுத்துவிட்டால், உங்கள் கணக்கில் உள்ள பணம் எதிராளியின் கணக்குக்குச் செல்ல தாயாராகும்.
இப்போது எதிராளி உங்களிடம் ஓடிபி எண்ணைக் கேட்பார். ஓடிபி எண் – எப்போதும் யார் பணத்தைச் செலுத்துகிறாரோ அவருக்கே வரும், பணத்தைப் பெறுபவருக்கு ஓடிபி எண் வராது. இது தெரியாமல் நீங்கள் ஓடிபி எண்ணை அவருக்குச் சொன்னால், உங்கள்
பணம் எதிராளியின் கணக்கிற்குப் போய்விடும். இதன் பின்னர் இந்த மோசடியில் ஈடுபடுபவர்களைப் பிடிப்பதும் கடினம்.
எனவே முன்பின் தெரியாதவர்களுடன் வர்த்தகம் செய்யும் போது, எப்போதும் விழிப்புடன் இருங்கள். மக்களின் விழிப்புணர்வே புதிது புதிதாக முளைக்கும் மோசடிகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும்.