மோசடி வழக்கு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்

ஹெலிகாப்டர் சகோதரர்களின் நிதி நிறுவன மோசடி வழக்கு, பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகிய இருவரும், நிதி நிறுவனம் நடத்தி கோடி கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யபட்டு, சிறையில் உள்ளனர். 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ள கணேசனின் மனைவி அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலக பணியாளர் வெங்கடேசன் ஆகியோர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள அகிலாண்டம் பெயரில் துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் 551 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவனங்கள் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஹெலிகாப்டர் சகோதரர்களின் நிதி நிறுவன மோசடி வழக்கு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரில் பல நூறு கோடி ரூபாய் முதலீடு இருப்பதாலும், மோசடி தொடர்பாக 41 வழக்குகள் இருப்பதாலும், நிதி நிறுவன மோசடி வழக்கு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், அகிலாண்டத்தின் ஜாமின் மனுவை நிராகரித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Exit mobile version