திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில், திருகார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, நான்காம் நாளில் அண்ணாமலையார் தங்க மரத்திலான கற்பக விருட்ச வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் நான்காம் நாளில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நான்காம் நாள் உற்சவத்தில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர் வள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் கற்பக விருட்ச வாகனத்திலும், பராசக்தி வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கற்பக விருட்சம் எனப்படும் தங்க மரத்தினாலான வாகனத்தில் உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா என கோஷமிட்டு வழிபட்டனர்.