46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வானம்பாடிப் பறவையின் படிமம் மீட்பு

46 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வானம்பாடிப் பறவையின் உடல் படிமம்  ஒன்று சைபீரியா நாட்டில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பனியுகம் தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளிவருமா?

உலகத்தின் பெரும் பகுதி பனியால் சூழப்படிருந்த வரலாற்றுக் காலம், ஐஸ் ஏஜ் அல்லது ‘பனியுகம்’ என்று அழைக்கப்படுகின்றது. இன்றைய மிருகங்களின் மூதாதையர்கள்தான் பனியுகத்தில் வாழ்ந்தன. இவற்றில் பெரும்பாலான உயிரினங்கள் இன்று அழிந்துவிட்டாலும், பனியுக உயிரினங்களின் வழிவந்த உரிரினங்கள் இன்று உலகம் முழுவதும் உள்ளன.
 
மாமூத் எனப்படும் கொம்பு நீண்ட யானைகள், கம்பளி முடி போர்த்திய காண்டா மிருகங்கள், ஓநாய்க்கும் நாய்க்கும் இடைப்பட்ட நாய்கள் – என பனியுகத்தில் வாழ்ந்த பல உயிரினங்களின் படிமங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
 
இதுவரை கிடைத்த பனியுக உயிரினங்களின் படிமங்களில் பெரும்பாலானவை கடல் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களின் படிமங்களாகவே உள்ள நிலையில், சைபீரியாவில் 46ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு பறவையின் முழுமையான படிமம் தற்போது கிடைத்துள்ளது அறிவியலாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
 
இன்று முற்றிலுமாக அழிந்துபோய்விட்ட இந்தப் பறவை வானம்பாடி இனத்தைச் சேர்ந்தது, நிகழ்காலத்தில் உலகில் உள்ள கொம்பு வானம்பாடி உள்ளிட்ட இரண்டு வானம்பாடிப் பறவைகள் இந்த வகைப் பறவையின் இனத்தில் வந்தவையே ஆகும்!.
 
வடகிழக்கு சைபீரியாவில் படிமங்கள், தந்தங்கள் ஆகியவற்றைத் தேடி ஆய்வு செய்த குழுவுக்கு இந்தப் படிமம் தற்செயலாகக் கிடைத்தது. அந்தக் குழு ஸ்வீடன் நாட்டு அருங்காட்சியக ஆய்வாளர்களிடம் இந்த படிமத்தை ஒப்படைக்க, அவர்கள்தான் இந்த வானம்பாடி 46 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனக் கண்டறிந்துள்ளனர். இந்தப் பறவை தரைக்கு மிக அருகில், தாழப் பறந்த போது ஏற்பட்ட அழிவால் இறந்து படிமமாகி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
இந்தப் பறவையின் மூலம், பனியுகத்தில் வாழ்ந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் அந்தக் காலத்தைச் சேர்ந்த நுண்ணுயிரிகள் குறித்த பல்வேறு தகவல்கள் ஆய்வாளர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Exit mobile version