அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மீது குற்றச்சாட்டு!

ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் அமெரிக்காவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். மிகப்பெரிய செல்வந்தரான இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது ஏராளமான பாலியல் புகார்கள் இருந்தன. குறிப்பாக 18 வயது பூர்த்தியடையாத சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ  உள்ளிட்ட பெரிய புள்ளிகளுக்கு, சிறுமிகளை வழங்கியதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்தாண்டு சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிறுமிகளை வைத்து ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் தொழில் செய்து வந்தது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என பில் கிளிண்டன் அப்போது தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறித்து தற்போது புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கிஸ்லைன் மேக்ஸ்வெல் என்ற பெண்ணுக்கும், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கும் தகாத உறவு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிஸ்லைன் மேக்ஸ்வெல் என்பவர், ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்தவராக கருதப்படுகிறார். அவருடன் பில் கிளிண்டன் உறவு வைத்திருந்ததாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு, பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளது.ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு சொந்தமான விமானத்தில் பயணிக்கும்போது, கிஸ்லைன் மேக்ஸ்வெலுடன் பில் கிளின்டன் மிகவும் நெருக்கமாக இருப்பார் எனவும், மன்ஹாட்டனில் உள்ள கிஸ்லைனின் வீட்டிற்கு செல்வதையும் பில் கிளிண்டன் வழக்கமாகக் கொண்டிருந்தார் எனவும் அந்த புத்தகம் தெரிவிக்கிறது.கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுடன் நெருங்கி பழகவே, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பில் கிளிண்டன் நட்பு கொண்டிருந்ததாகவும், அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற பில் கிளிண்டனின் மகளின் திருமண நிகழ்ச்சியில், கிஸ்லைன் மேக்ஸ்வெல் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஜெஃப்ரி எப்ஸ்டீனிற்கு சொந்தமான விமானத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படமும் முன்னரே வெளியாகியுள்ளது.

கிஸ்லைன் மேக்ஸ்வெல், பில் கிளின்டன் இடையே நெருங்கிய நட்பு இருந்ததற்கு ஆதாரமாக, இந்தப் புகைப்படங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பில் கிளிண்டன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இதனிடையே, netflix-ல் ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறித்து Jeffrey Epstein: Filthy Rich என்ற ஆவணப்படம் ஒன்றும் அண்மையில் வெளியானது. அதில், கரீபியன் தீவில் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்றுக்கு பில் கிளிண்டன் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ரிசாட்டில்தான் அதிகளவில் பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ள பில் கிளிண்டன், அங்கு, தான் சென்றதே இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

பில் கிளிண்டன் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. கிளிண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது இது முதல் முறை அல்ல.1998ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது, வெள்ளை மாளிகையில் பணி புரிந்த மோனிகா லெவின்ஸ்கி என்பவருடன் அவர் தகாத உறவு வைத்திருந்ததாக செய்தி வெளியானது. அதனால், அவரின் அதிபர் பதவி பறிபோகும் நிலைகூட ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version