தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு, சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
2007ஆம் ஆண்டு அதிபராக இருந்த போது பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தை முடக்கி நெருக்கடி நிலையை பர்வேஸ் முஷராப் அறிவித்தார். இது தொடர்பாக அவர் மீது தேசத்துரோக வழக்கு, டிசம்பர் 2013 பெஷாவர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. முஷாரப் மீது 2014ல் குற்றம்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு முழு ஆதாரங்களையும் தாக்கல் செய்தது.
இதனிடையே, உடல் நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக 2016ம் ஆண்டு துபாய் சென்ற முஷராப், அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், பெஷாவர் நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அஹ்மத் சேத் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, தேசத் துரோக வழக்கில் பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்து உள்ளது.