லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையை வெற்றிகரமாக கடந்து, சென்னையில் இருந்து கோவை வந்த அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணிக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கடந்த 10ம் தேதி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்குச் சொந்தமான 60 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தது.
இதில் எதுவும் கிடைகாமல் லஞ்ச ஒழிப்புத்துறை பஞ்சநாமா கடிதம் வழங்கிவிட்டு வெறுங்கையுடன் திரும்பிச்சென்றனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணிக்கு, அலைகடலெனத் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்கள் வெள்ளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டதாகக் கூறினார்.
தன் மீதான வழக்கை, சட்ட ரீதியாக அணுக உள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பழிவாங்கும் நோக்கில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், நீதிமன்றத்தையும், நீதியரசர்களையும் தான் நம்புவதாகக் கூறினார்.
தான் எப்போதும் கோவை மாவட்ட மக்களுடன்தான் இருப்பதாக கூறிய முன்னாள் அமைச்சர், 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை கோவை மாவட்ட மக்களுக்கு தான் அமைச்சராக இருந்து பெற்று தந்ததற்காகத்தான், அத்தனை உற்சாகமாக மக்கள் வரவேற்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
லஞ்சஒழிப்புத்துறை சோதனையில் 13 லட்சம் ரூபாய் பிடிபட்டதாகவும், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகவும் வெளியான செய்தி தவறானது என்றும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ அவர் இல்லம் சேர்ந்தார். வழியில் குனியமுத்தூர் உட்பட 2 இடங்களில் அவருக்கு மலர்க்கொடுத்து பொதுமக்களும் தொண்டர்களும் வரவேற்றனர்.