"திமுக சொன்னது ஒன்று, தற்போது செய்வது ஒன்று" – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னது ஒன்று, தற்போது செய்வது ஒன்று என சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, இந்தியாவிலேயே உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை 51 புள்ளி 4 சதவீதமாக உயர்ந்தது அதிமுக ஆட்சி காலத்தில் தான் என பெருமிதம் தெரிவித்தார்.

அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 3 தொழிற்சாலைகளை கொண்டு வந்ததாகவும், இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

விவசாயிகளின் நலன் கருதி கடந்த ஆட்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மலர் ஏற்றுமதி நிலையம் அமைக்கப்பட்டதாகவும் எடுத்துரைத்தார்.

தென்மாநிலங்களுக்கு தேவையான காய்கறிகளை விளைவிக்கும் பகுதியாக கிருஷ்ணகிரி உள்ளது என சுட்டிக்காட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் விவசாயம் செழிக்கும் மாவட்டமாக இருந்தபோதிலும், போதிய நீராதாரம் இல்லை என்றும், தென்பெண்ணை ஆற்றில் வரும் நீர், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக கிடைக்கும் வகையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தண்ணீர் பிரச்சனை வரும் போது காவிரியில் கவனம் செலுத்துவது போல், தென்பெண்ணை ஆற்றில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நடந்தாய் வாழி காவிரி திட்டம் போல, தென்பெண்ணை ஆற்றின் 320 கிலோ மீட்டர் தூரத்தை முறைபடுத்தி கழிவுநீர் கலப்பதை தடுத்து, கிளை ஆறுகளை வளப்படுத்த வேண்டும் என கே.பி.முனுசாமி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்த திமுக, அதில் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது என்னவானது என கேள்வி எழுப்பினார்.

அதேபோன்று, பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக, சொன்னது ஒன்றும், செய்தது ஒன்றுமாக உள்ளது என அவர் சாடினார்.

நாடாளுமன்ற தேர்தலின்போதும், சட்டமன்றத் தேர்தலின்போதும், 100 நாட்கள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என்று சொல்லிவிட்டு இப்போது மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறுவது முன்னுக்கு பின் முரணாக உள்ளதாக விமர்சித்தார்.

சட்டப்பேரவையில் பேசுவதற்கு, அனைவருக்கும் முறையாக நேரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கேட்டுக் கொண்டார்.

 

 

Exit mobile version