ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதை கண்டித்து, விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்ட மாணவர்களின் நலன் கருதி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இப்பல்கலைகழகத்தை முடக்கும் வேளைகளில் தீவிரமாக செயல்பட்ட திமுக அரசு, இன்று சட்டப்பேரவையில் இதுதொடர்பான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தது. இதனை கண்டித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம், பழைய பேருந்து நிலையத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து மாவட்ட ஒன்றிய பேரூராட்சி, நகர கழக நிர்வாகிகள் பழைய பேருந்து நிலையம் அருகே கூடி, திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதை கண்டித்து, விழுப்புரம் புதுச்சேரி சாலையில் காந்தி சிலை அருகே அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பொதுமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.