விழுப்புரத்தில் உள்ள டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்ட ஏழை மாணவர்கள் பயனடையும் வகையில் டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்க அதிமுக ஆட்சியில் இடம் ஒதுக்கி, அதற்கான பணிகள் நடைபெற்று வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டினார்.
டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அம்மா” என்ற பெயருக்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சாடினார். டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் எந்த பணிகளும் செய்யக்கூடாது என வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
பல்கலைக்கழகத்தை செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காவிட்டால், அடுத்தகட்டமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எச்சரித்துள்ளார்.