தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் வந்துள்ள மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத்திடம் குடியுரிமை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து கடந்த 11ஆம் தேதி மாலத்தீவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற கப்பலில் இந்தோனேசியாவை சேர்ந்த 8 ஊழியர்களும், 1 இந்தியரும் சென்றனர். 27ஆம் தேதி சரக்கு பொருட்களை இறக்கிவிட்டு தூத்துக்குடி நோக்கி வரும்போது, பத்தாவது நபராக ஒரு நபர் கப்பலில் வந்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடி அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து உளவுத்துறையினர், கடலோர காவல் படையினர் நடுக்கடலில் கப்பலில் வந்த பத்தாவது நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கப்பலில் வந்த 10வது நபர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் என்பது தெரியவந்தது. அவரிடம் குடியுரிமை அதிகாரிகள், கடலோர காவல் படையினர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். எந்தவொரு ஆவணமும் இன்றி அவர் இந்தியாவுக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. 2015ல் மாலத்தீவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் அகமத்திற்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.