முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கிற்கு ரூ.500 அபராதம்!

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கிற்கு சென்னை போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்பட்டுத்த கடந்த 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்புபவர்கள் தங்கள் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவில் நடந்தே சென்று பொருட்களை வாங்க வேண்டும் என தொடர்ந்து காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தனது காரில் சாஸ்திரி நகரில் இருந்து திருவான்மியூர் பகுதிக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அவரை மடக்கி விசாரித்த போலீசார், காய்கறி வாங்க காரில் செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் முகக்கவசம் அணிந்திருந்ததால் அவரை அடையாளம் காணமுடியாததாலும் மொழிப்பிரச்னையாலும் ராபின் சிங் அங்கேயே காரை நிறுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரது காரை பறிமுதல் செய்த போலீசார், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Exit mobile version