விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ரேசன் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக அரசு எப்போது செயல்படுத்தும் என முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்து வகை பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்பு துறையின் மானிய கோரிக்கையின் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு,
அதிமுக ஆட்சியில் பொது விநியோக திட்டத்தில், 3 ஆயிரத்து 501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, 60 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை வெறும் 2 விருதுகளே பெற்றிருந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தேசிய அளவில் 28 விருதுகளை கூட்டுறவுத்துறை பெற்றதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.
இலவச பேருந்து சேவையில் பெண்களிடையே ஏற்படும் குழப்பத்தை தடுக்க, அனைத்து வகை பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பென்னிகுயிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் பெயரில் நூலகம் கட்ட இருப்பதாக வரும் செய்திகளில் திமுக அரசு கவனம் செலுத்தி மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.