முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தன் 87ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
கேரள மாநிலம், பாலக்காடு திருநெல்லையில் 1932ம் வருடம் பிறந்த டி.என்.சேஷன், இயற்பியல் பட்டப்படிப்பு முடித்த பின், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். அதன் பின் ஐ.ஏ.எஸ் படிப்பை முடித்த அவருடைய முழுப்பெயர் திருநெல்லை நாராயண ஐயர் சேஷன். 1955ம் ஆண்டு தமிழக பிரிவில் ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்து பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் இந்தியாவின் பத்தாவது தலைமை தேர்தல் ஆணையராக 1990லிருந்து 1996ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
சேஷன் 1989ல் 18 வது மத்திய அமைச்சரவை செயலாளராக பணி புரிந்துள்ளார். அவர் தன் சிறப்பான பணிகளுக்காக ராமன் மகாசேசே. அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலையில் பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷனுக்கான மாஸ்டர் பட்டமும் பெற்றார். தன் பதவி காலங்களில் தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் சேஷன். தலைமை தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற பின், 1997ல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில், கே.ஆர்.நாராயணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். சென்னை அடையாறில் வசித்து வந்த அவர் சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த நிலையில், நேற்று காலமானார்.