சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு வனச் சட்டத்திருத்த மசோதாவால் நீலகிரியில் பொதுமக்கள் நிலங்கள் அல்லது விவசாய நிலங்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னாசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் ஜென்மம் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் ஜென்மம் ஒழிப்பு சட்டப்பிரிவின் படி ஒதுக்குக்காடாக மாற்றுவதற்கு உள்ள பல்வேறு கட்ட நெடிய நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதற்காகவே தற்போது பிரிவு 16 A என்னும் புதிய பிரிவை உருவாக்கி, சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
இந்த திருத்தமானது ஏற்கனவே வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்ட வன நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். இத்திருத்தத்தின் வாயிலாக ஏற்கனவே குடியிருந்து வருபவர்களுக்கோ விவசாயிகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார். இதுதொடர்பாக தவறாக பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.