தமிழக சட்டப்பேரவையில் இன்று, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை கடந்த 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடியது. அன்றைய தினம் கூட்டம் தொடங்கியதும் மறைந்த தி,மு,க பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் மறைந்த எம்,எல்,ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதை அடுத்து, இன்று மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடக்கிறது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் நடைபெறும். அதைத்தொடர்ந்து வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். வனத்துறை மீது நடைபெறும் விவாதத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்து பேசுவார். சுற்றுச்சூழல் துறை மீது நடைபெறும் விவாதத்துக்கு அமைச்சர் கருப்பணன் பதில் அளித்து பேசுவார். தொடர்ந்து இரண்டு துறைகளுக்கும் 2020-21ஆம் ஆண்டிற்கான நிதி வழங்குவதற்கு பேரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும்.