கொடைக்கானலில் வனத்துறை மற்றும் காவல்துறையினர் அதிரடி நடடிவக்கை!!

ஊரடங்கைச் சாதகமாக்கி, கொடைக்கானலில் ஏக்கர் கணக்கில், கஞ்சா பயிரிட்டவர்களைக் கைது செய்து, கஞ்சா செடிகளையும் அழித்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பு…

நாடு முழுவதும் ஊரடங்கு… மக்கள் நடமாட்டம் இல்லாத சூழல்… மதுக்கடைகளில் கடும் கட்டுப்பாடுகள்… இவை அனைத்தையும் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கஞ்சா வளர்ப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைத் தேர்ந்தெடுத்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள புகழ்பெற்ற சுற்றலாத்தலமான தூண்பாறை வனப்பகுதியில் கஞ்சாவை பயிரிட்டு வளர்த்து வந்தனர். இதுகுறித்து, வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், தூண்பாறை மலைச்சரிவில் ஐந்து அடி உயரத்திற்கு மேல் வளர்ந்து நின்ற கஞ்சா செடிகளைக் கண்டுபிடித்தனர். பின்னர் முறைப்படியாக, வனத்துறை உயரதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்து, கஞ்சாச் செடிகளை அழிக்கும் வேலைகள் தொடங்கின. ஒற்றையடிப் பாதை வழியாக சுமார் 2 கி.மீ நடந்தே சென்ற வனத்துறை மற்றும் காவல்துறையினர், கஞ்சா செடிகள் வளர்ந்திருக்கும் இடத்தை அடைந்தனர். அங்கு, அமைக்கப்பட்டிருந்த கூடாரம் ஒன்றில், பதப்படுத்தப்பட்ட கஞ்சா இருந்ததையும் அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் மொத்தமாக அனைத்தையும் தீயிட்டு அழித்தனர்.

மேலும், கஞ்சா வளர்த்தது தொடர்பாக கொடைக்கானலைச் சேர்ந்த சக்திவேல், பிரதீப் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த சமயத்தில் அங்கிருந்து தப்பியோடிய சிலர் குறித்து, காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி, வீரமணி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டால், கஞ்சா வளர்ப்பு மற்றும் வியாபாரம் குறித்த பல மர்மங்கள் விலகும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகலாக பணிபுரிந்து வரும் இந்த இக்கட்டான நேரத்திலும், வனப்பகுதிக்குள் அமைந்துள்ள மலைச்சரிவில் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளையும் கண்டுபிடித்து, அழித்ததுடன் குற்றவாளிகளையும் கண்டறிந்த காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.

Exit mobile version