அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீதான குற்றச்சாட்டு பதிவு வரும் 28 ம் தேதி காணொலி காட்சி வழியாக நடைபெறும் என எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அந்நிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கப் பிரிவு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக 5 வழக்குகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. சசிகலா மீதான 4 வழக்குகளில், 2 வழக்கில் ஏற்கனவே குற்றச்சாட்டு பதிவு முடிவுற்ற நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் மாஜிஸ்டிரேட், மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 28 ம் தேதி, குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் உள்ள 2 வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் என்றும், சிறையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவுக்கு சசிகலா ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.