சாயல்குடி அருகே கொத்தன்குளம் கண்மாயில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருவதால், கால்வாயை தூர்வாரி தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலச்செல்வனூரில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து கொண்டிருந்தன. சில ஆண்டுகளாக போதிய நீர் இல்லாத காரணத்தால் வெளிநாட்டு பறவைகள் வரத்துக் குறைந்துள்ளது.
இந்நிலையில் சாயல்குடி அருகேயுள்ள கொத்தன்குளம் கண்மாயில் தற்போது ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் குவியத் தொடங்கியுள்ளன. வலசை சென்றுவிட்டு அங்குள்ள சீமைக் கருவேல மரங்களில் ஏராளமான பறவைகள் அமர்ந்திருப்பது மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியிலுள்ள நீர் நிலைகளை தூர்வாரினால், நிரந்தரமாக நீர் தேங்கி இப்பகுதியும் பறவைகள் சரணாலயமாக மாறும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.