ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க, ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து செயல்பட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விற்பனை பாதிப்பு மற்றும் தொடர் இழப்பு காரணமாக சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை மூட இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஃபோர்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காரணமாக 4 ஆயிரம் நேரடித் தொழிலாளர்களின் எதிர்காலமும், 40 ஆயிரம் மறைமுகத் தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த நிறுவனத்திற்கு மூலப் பொருட்களை வழங்கி வரும் நான்கு ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உள்ளதால், தொழிலாளர்களின் நலனை காக்க, தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை தொடர்ந்து நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிக்கையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.