தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, தமிழை நிலை பெறச்செய்ய உயிர்நீத்த, தியாகிகளை நினைவுகூர்வதற்காக மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு , ‘அனைத்து மக்களும் ஏற்கும் வரையில் ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கும்’ – என்று நேரு கொடுத்த வாக்குறுதியை, அடுத்து வந்த காங்கிரஸ் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மீறியதன் விளைவுதான் மொழிப்போர்.
1937-ஆம் ஆண்டில் இருந்தே தமிழகம் இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் முனைப்பு காட்டினாலும், தாளமுத்து, நடராசன் போன்றோர் உயிரைக் கொடுத்துப் போராடினாலும், ஒட்டு மொத்தத் தமிழகமும் இணைந்து இந்தியைப் போராடி விரட்டியது 1965ஆம் ஆண்டில்தான்.
முன்னதாக 1963-ஆம் ஆண்டில், இந்தியாவின் 15-ஆவது குடியரசு தினத்தின்போது அன்றைய உள்துறை அமைச்சர் குல்ஜரிலால் நந்தா, ‘இந்தி மொழி மட்டுமே அரசாங்க மொழியாக இருக்கும்’ – என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் கொந்தளித்தது. 1964ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதியன்று 27 வயதே ஆன இளைஞர் திருச்சி சின்னச்சாமி தமிழ் மொழியைக் காக்க தீக்குளித்தார். தமிழக மொழிப்போர் வரலாற்றின் முதல் தீக்குளிப்பு சம்பவம் இதுதான்.
இதன் பின்னர் 1965ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை திமுக கறுப்புதினமாக அறிவித்தது. இதனால் ஜனவரி 25-அன்று அறிஞர் அண்ணாவும் பல்லாயிரம் தொண்டர்களும் சிறைவைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மக்கள் கொதித்து வீதியில் இறங்கிப் போராடினர்.சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி ஆகிய ஐவர் தீக்குளித்தனர். தண்டாயுதபாணி, முத்து, சண்முகம் ஆகிய மூவர் விஷம் அருந்தினர். 2 வாரங்களாக தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களில் சுமார் 70 பேர் மரித்தனர். இதனால் அச்சம் அடைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ‘ஆங்கிலம் இணைப்பு மொழியாகத் தொடரும்’ என்று வானொலியில் அறிவித்தார். அதன் பின்னரே தமிழகம் போராட்டத்தை நிறுத்தியது.
இப்படியான மொழிப்போர்களில் தங்கள் இன்னுயிரை நீத்த அனைவரின் தியாகத்தையும் போற்றும் நாளாகவே ‘மொழிப்போர் தியாகிகள் நாள்’ ஆண்டுதோறும் ஜனவரி-25-அன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் நிலைக்க உயிர் துறந்தவர்கள், தமிழ் உள்ள காலமெல்லாம் நிலைப்பார்கள் என்பதையே இந்த நாள் நமக்குக் கூறுகின்றது.