15ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, அதிமுக வடசென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் காசிமேடு பகுதியில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.
சென்னை காசிமேட்டில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் சுனாமி நினைவு மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, ஊர்வலமாக சென்று, கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அவர்கள், கடல் அலைகளில் பால் ஊற்றியும், பூக்களைத் தூவியும் மரியாதை செலுத்தினர். ஊர்வலத்தின் நிறைவாக, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ், காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சூட்டுவதற்காக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறினார்.