இலங்கை குண்டு வெடிப்பில் பலியானோருக்கு ஏராளமானோர் அஞ்சலி

இலங்கை குண்டு வெடிப்பில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்செந்தூரில் நடைபெற மவுன ஊர்வலத்தில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்செந்தூரில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. புன்னக்காயல், அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் தேரடியிலிருந்து அமலிநகர் மீனவ கிராமம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் சிலர் கைக்குழந்தையுடன் பங்கேற்று குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு வேளாங்கண்ணி பேராலயம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. பேராலயத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை பேராலய அதிபர் பிரபாகர் தொடங்கி வைத்தார். பேராலய முகப்பில் இருந்து தொடங்கிய அமைதி பேரணி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கீழ் கோவிலை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் இலங்கையை சேர்ந்த அருட்தந்தை அந்தோணிசாமி மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version