முதல்முறையாக மக்களவையில் தடம் பதிக்கும் 78 பெண் எம்.பி.க்கள்

நாட்டின் 17வது மக்களவையில் இதுவரை இல்லாத அளவில் பெண்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இதுவரை இல்லாத அளவில் பெண்களுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது. வரலாற்று சாதனையாக இந்த முறை 78 பெண் எம்.பி.க்கள் அதாவது 14 சதவிகித பெண்கள் மக்களவையில் கால் பதிக்க உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 64 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதல்முறையாக இந்த எண்ணிக்கையில் பெண்கள் மக்களவைக்கு தேர்வாகியுள்ளனர். அதிகபட்சமாக உத்தரபிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 11 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தமுறை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அதிகளவில் பெண் வேட்பாளர்களை களமிறக்கியது. பாஜக சார்பில் 53 பெண் வேட்பாளர்களும் காங்கிரஸ் சார்பில் 54 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 104 பெண் வேட்பாளர்களும் அடுத்ததாக தமிழகத்தில் 64 பெண் வேட்பாளர்களும் களம்கண்டனர்.இதேபோல முஸ்லிம் வேட்பாளர்களும் இந்த மக்களவை தேர்தலில் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

Exit mobile version