டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று, ஒரே கட்டமாக தேர்தல்

டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, வாக்குபதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 672 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் வாக்கு அளிக்க 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பிற்காக 40 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் மத்திய ஆயதப்படை காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்குபதிவை கண்காணிக்க, வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதே போல், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி, கூட்டணியின்றி மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. மாலை 6 மணிவரை வாக்குபதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து பிப்ரவரி 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version