நம்பியூர் அருகே உள்ள வரப்பாளையத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக நீரேற்றும் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களின் 60ஆண்டுக்காலக் கனவுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சர் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வரப்பாளைத்தில், அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்காக தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நீரேற்றும் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. இதற்கான பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணிகள் தொடங்கியது. இதன் மூலம் தங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிறைந்து, விவசாயம் சிறப்பாக நடைபெறும் என்பதால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.