மத்திய அரசின் தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கான விருது தமிழக கடலோர காவல்படைக்கு டிசம்பர் 18-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 76 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரைப் பகுதியைப் பாதுகாக்கும் பணியை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் 42 கடற்கரை காவல் நிலையங்களில், 670 காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீவிரவாத ஊடுருவலை தடுப்பது, போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலை தடுப்பது, ஆபத்தில் சிக்கியிருக்கும் மீனவர்களை மீட்பது உள்ளிட்ட சவாலான பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கான விருது, தமிழக கடலோர காவல்படைக்கு முதன் முறையாக கிடைத்துள்ளது. வரும் டிசம்பர் 18-ஆம் தேதி, டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. சவாலான சூழ்நிலைகளில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.