கடலூரில் உள்ள பாசர் கிராமத்தில் உப்பு நீரைக் குடித்துவரும் மக்கள், திமுக எம்.எல்.ஏ தங்களைக் கண்டுகொள்ளாததால், தமிழக அரசு சுத்திகரிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்…
கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாசர் கிராம மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக உப்புத் தன்மையுள்ள நீரையே குடித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மணல் அடுக்குகளில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால் இதனைத் தொடர்ந்து குடிக்கும் மக்கள் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த பிரச்சனைக் குறித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் கணேசனிடம் பலமுறை தெரிவித்தும் அவர் செவிசாய்க்கவில்லை என்றும், தேர்தல் சமயத்தின் போது வாக்கு கேட்டு மட்டுமே இந்த ஊருக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசு தங்கள் கிராம மக்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.