துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி, ஆலைகளில் தொடர் சோதனை

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சிமெண்ட் ஆலைகளில் நடத்திய சோதனையில், கட்டுகட்டாக பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர், பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மக்களவை தேர்தலில் திமுகவிற்காக பணப்பட்டுவாடா செய்யும்பொருட்டு, அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் ஏராளமான பணத்தை பதுக்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து வருமான வரித்துறையினர் அவருக்கு சொந்தமான வீடு, கல்லூரி மற்றும் தொழிற்சாலைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், துரைமுருகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரி, சிமெண்ட் தொழிற்சாலைகளில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் தேர்தலில் பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடியே 48 லட்சம் ரூபாயை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

கணக்கில் வராத, கட்டுக்கட்டான இந்த பணத்தை கைப்பற்றிய வருமான வரித்துறையினர், மேலும் டைரி, ஹார்டுடிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதில் யார் யாருக்கு பணம் விநியோகிப்பது என்பது குறித்த விவரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கிங்ஸ்டன் கல்லூரி, வேலூர் சிமெண்ட் குடோனில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சிக்கிய ஆவணங்களை வைத்து தீவிர விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Exit mobile version