திமுக ஸ்டாலினுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கண்டனம்

சென்னை மாநகராட்சியின் கட்டுமான பணிக்கு, ஆற்று மணலுக்கு கணக்குகாட்டி, M-Sand-ஐ பயன்படுத்தி ஊழல் நடந்ததாக, பொய் தகவலை பரப்பி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜீரோ ஸ்டாலின், ஹீரோ ஆகிவிடலாம் என்ற நப்பாசையுடன், அதிமுக அரசை குறை சொல்லி, குற்றம் சுமத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த ஸ்டாலின், வார்டுகள் தோறும் சிறப்பாக நடைபெற்று வரும் பணிகளை, மக்கள் பார்த்து உணர்ந்த காரணத்தால், இந்த புளுகு எடுபடாது என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய வேறொரு புளுகை அவிழ்த்து விட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித்துறை மூலம் சென்னை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு, ஆற்று மணல் பயன்படுத்தியதாக மதிப்பீடு கொடுத்துவிட்டு, எம்-சாண்ட் பயன்படுத்தியதாகவும், இதனால் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் ஸ்டாலின் நஞ்சைக் கக்கி இருப்பதாக அறிக்கையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலினின் பொய்களுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள், தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின் படி முறையாக ஆன்லைன் மூலம் கோரப்பட்டு, விதிகளுக்குட்பட்டு ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்படுவதை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளில், ஆற்று மணல் அல்லது எம்-சாண்ட் கலந்த சிமெண்ட் கலவைகள் கொண்டு, ஆயிரத்து 164 கோடியே 85 லட்சத்துக்கு பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு நடைபெற்ற பணிகளில், மணல் சேர்த்து செய்யப்படும் கான்கிரீட் பணிகள் 33 சதவிகிதமே ஆகும். இதன் மதிப்பீடு 384 கோடி ரூபாய் மட்டுமே என அறிக்கையில் புள்ளி விவரங்களுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். இந்த கான்கிரீட் பணிகளில் கலக்கப்படும் எம்-சாண்ட் அல்லது ஆற்று மணலின் அளவு, வெறும் 8 புள்ளி 5 சதவீதம் மட்டுமே என்றும், இதன் மதிப்பு வெறும் 32 கோடியே 67 லட்சம் மட்டுமே என்றும் அமைச்சர் தெளிவுப்படுத்தி உள்ளார்.

வெறும் 32 கோடியே 67 லட்சம் ரூபாய் பணிக்கு, ஏதோ, ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்து விட்டதாக ஸ்டாலின் கூறியிருப்பது கடைந்தெடுத்த பொய் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்றால், ஸ்டாலின் அரசியலை விட்டே ஒதுங்கிப் போக வேண்டும், நிரூபித்தால் உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விடுத்துள்ளார்.

Exit mobile version