குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 16 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தித் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து, தமிழகத்தின் 16 மாவட்டங்களில் சோதனை முறையில் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, அமர்வு நீதிபதிகள் இதனை விசாரிக்க
உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மகளிர் நீதிமன்றங்கள் பெண்களுக்கு எதிரான வழக்குகளோடு, கூடுதலாகக் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளையும் விசாரிக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.