ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கிராம மக்கள் கூட்டு முயற்சியால் மருத்துவ குணமுடைய சிறிய ரக பாகற்காய் சாகுபடி செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கருவேல மரங்களை வளர விடாமல் பராமரித்து வரும் அப்பகுதி மக்கள், வருடம் தோறும் சிறிய ரக பாகற்காய்களை சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். வீட்டுக்கு ஒருவர் வீதம் இப்பணியில் பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கான எல்லையை வரையறை செய்து கொள்ளும் அப்பகுதி மக்கள், கோடை காலத்தில் மட்டுமே சிறிய ரக பாகற்காய் பயிரிட்டு வருகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு குறையாமல் அறுவடை செய்யப்படும் பாகற்காய்கள் சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒருபடி பாகற்காய்க்கு 40 ரூபாய் வரை கிடைப்பதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.