வேலூர் அருகே தங்கள் கிராமத்தில் கூட்டமாக வசித்து வரும் வெளவால்களை துன்புறுத்தாமல் இருப்பதற்காக கிராமமக்கள் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்துள்ள காலம்பட்டு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள புளிய மரங்கள் மற்றும் ஆல மரங்களில், வவ்வால் இனத்தில் பெரிய வெளவால் என்று அழைக்கக்கூடிய பழந்தின்னி வெளவால்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.
மொத்தமாக, சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் இப்பகுதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த நான்கு தலைமுறையாக இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெளவால்களை தங்கள் காவல் தெய்வமாக எண்ணி பாதுகாத்து வருகின்றனர்.
பட்டாசு வெடித்து இந்த வெளவால்களை துன்புறுத்தாமல் இருப்பதற்காகவும், வெடி சத்தம் கேட்டு வெளவால்கள் வேறு பகுதிக்கு இடம் பெயராமல் இருப்பதற்காகவும், தீபாவளி, சுப முகூர்த்தங்கள் மற்றும் இறப்பு போன்ற நேரங்களில் கூட இப்பகுதி மக்கள்
பட்டாசுகள் வெடிப்பதில்லை. அதேபோல் மேளதாளங்கள் வாசிப்பதும் இந்த கிராமத்தில் ஊர்மக்கள் சார்பில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய இப்பகுதி மக்கள், வெளவால்களை தங்கள் காவல் தெய்வமாக போற்றி வருவதாகவும், அவை பெரும் கூட்டமாக இங்கு குடியிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், இது போல கூட்டமாக வசித்துவரும் வெளவால்களை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட அதிகளவில் இந்த கிராமத்திற்கு வந்து செல்வது தங்களுக்கு பெருமையாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இந்த வெளவால்கள் இரை தேடி இரவில் வெளியில் எந்த பகுதிக்கு சென்றாலும் மீண்டும் இதே இடத்திற்கே திரும்பி வந்துவிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடையே குறைந்துவரும் இந்த காலத்திலும், வெளவால்களுக்காக தங்கள் கொண்டாட்டத்தையே விட்டு கொடுத்துள்ள இந்த கிராம மக்களின் செயல் பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை.