பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்து விட்டார். ஆனால் இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், இந்த இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறிய அவர், இதனை அமல்படுத்த அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.