பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் க்கு இன்று 86 வது பிறந்த நாள்.. தமிழ் திரைப்பட வரலாற்றில், மணிமகுடமாக திகழும் அவரது நினைவை சற்று அசைபோடுவோம்…
ஒருத்தரோட வாழ்க்கையில எப்படி இருக்கனும், என்ன சாதிக்கனும்னு ஆயிரம் கனவுகளோடையும் லட்சியங்களோடையும் இருந்தாலும், காலம்தான் அதை தீர்மானிக்குதுன்னு சொல்வாங்க. அப்படி இனி எந்த காலத்துலயும் மறக்கமுடியாத கலைஞனா நமக்கு காலம் தீர்மானிச்சு கொடுத்த ஒரு கலைஞன் தான் நாகேஷ். ராமாயண நாடக ஒத்திகையில கம்பராமாயணப் பாடல ஒரு நடிகர் தவறாப் பாடுறாருன்னு நாகேஷ் சுட்டிக்காட்டும்போது, அவருக்கு அவமரியாதை ஏற்படுது. அந்த கோபத்துல நாமும் நாடகத்துல நடிக்கனும்னு முடிவு செஞ்சு நாடகக் கம்பெனியில சேர்றாரு நாகேஷ். பெரிய நடிகரா வரனும்னு ஆசப்பட்டவருக்கு, அம்மா அம்ம்மா…னு கத்துற வயிற்றுவலி வந்தவனா நடிக்கிற வேடத்த கொடுக்குறாங்க. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுங்குற மாதிரி, அவர் அன்னைக்கு கத்துன கத்து அந்த அரங்கத்தையே அதிர வச்சுது. அதே கத்து… அவர தமிழ் சினிமாவோட அசைக்க முடியாத கலைஞனா அஸ்த்திவாரம் போட்டு நிக்கவும் வச்சுது. நாகேஷுங்குற மகா கலைஞன அன்னைக்கு பாராட்டுன புரட்சித்தலைவர் பல திரைப்படங்கள்ல கூட நடிக்க வச்சு அழகு பார்த்தாரு.
எம்.ஜி.ஆர் நாகேஷ் அம்மைத் தழும்போட அந்தக் கால சினிமாவுக்கு கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாம இருந்த நாகேஷுக்கு அவரோட வீட்டில கூப்பிடுற பெயரும் கொஞ்சமும் பொருத்தமில்லாததுதான். செய்யூர் கிருஷ்ண நாகேஷ்வரன்னு பெயர் இருந்தாலும், குண்டுராவ்.. குண்டப்பான்ன்னு தான் வீட்ல கூப்பிடுவாங்களாம். தாராபுரத்துலேருந்து சென்னைக்கு கிளம்பி வந்தபிறகு கவிஞர் வாலியும், இயக்குநர் ஸ்ரீதரும் ஒரே அறையில தங்கி வாய்ப்புத் தேட ஆரம்பிச்சிருக்காங்க. புண்பட்ட மனச புகைவிட்டு ஆத்துறதுன்னு சொல்வாங்க. ஆனா வாய்ப்புத் தேடுன காலகட்டங்கள்ல நாகேஷும் வாலியும் சாப்பாடு இல்லாம புண்பட்ட வயித்ததான் புகைவிட்டு நிறப்பிகிட்டாங்க.
நாகேஷ் 1959ல தாமரைக்குளம் திரைப்படத்துல ஒரு சின்ன கதாபாத்திரத்துல நடிக்கும்போது, அவர் சரியா நடிக்கலன்னு யூனிட்ல இருந்தவங்கல்லாம் பேசினதும் நாகேஷ் நொந்துபோறாரு. அதை பாத்த எம்.ஆர்.ராதா…. மத்தவனெல்லாம் நடிகன். நீ கலைஞன் கவலைப்படாம நடின்னு சொன்னாராம். அதுக்குப் பிறகு அன்னை, நெஞ்சம் மறப்பதில்லை, படகோட்டின்னு பல திரைப்படங்கள்ல நாகேஷ் நடிச்சாரு. இவையெல்லாம் நாகேஷை ஒரு நல்ல நகைச்சுவை நடிகரா அடையாளம் காட்டியிருந்தாலும் 1964ல ரிலீஸான சர்வர் சுந்தரம் திரைப்படம் நாகேஷுக்கு கதாநாயகன் என்கிற அடையாளத்த கொடுத்துது. ஊருகாய் கம்பெனி வேலை, மில் வேலை, சர்வர் வேலைன்னு பல வேலைகளையும் செஞ்ச அவருக்கு சர்வர் வேலையில கிடைச்ச அனுபவம் சர்வர் சுந்தரம் திரைப்படத்துல நடிக்கிறதுக்கு ரொம்ப உதவியா அமைஞ்சுது.
சர்வர் சுந்தரம் நாகேஷுக்கு எந்த விருதையும் வீட்டுல பார்வைக்கு வைக்கிற பழக்கம் இல்ல. அதுக்கு ஒரு கதை இருக்கு. முதன் முதலா எம்ஜிஆர் முன்னாடி நடிச்சு காமிச்சு பாராட்டு வாங்குனபோது, அவர் ஒரு வெள்ளிக்கோப்பையை பரிசாக் கொடுக்குறாரு. அதை மிகப்பெரிய அங்கீகாரமா நினைச்சு பாதுகாத்துகிட்டு இருக்கும்போது ஒருநாள் அந்த வெள்ளிக்கோப்பை காணாமல் போகுது. சாப்பிட காசு இல்லாததுனால உடன் தங்கியிருந்த நண்பர் ஒருத்தர் அதைவித்து செலவு செஞ்சது தெரியவருது. அன்னைக்கு இரவு முழுவதுமே தூங்காம அழுதுகிட்டு இருந்த நாகேஷ், அதுக்குப் பிறகு கிடைச்ச எந்த விருதுகளையுமே பார்வைக்கு வைக்கல.
எதாவது இந்த கதாபாத்திரத்துல இவர் நடிச்சா நல்லாருக்கும், இதுல இவருக்கு பதிலா அவர நடிக்க வச்சிருக்கலாம்னு எத்தனையோ நடிகர்களுக்குச் சொல்ல முடியும். ஆனா நாகேஷுக்கு மட்டும் அப்படி சொல்லவே முடியாது. அவர் நடிச்ச ஒரு கதாபாத்திரத்த வேற எந்த நடிகர வச்சும் கற்பனை பண்ணி பாக்கமுடியாத அளவுக்கு சிறப்பான நடிப்ப வெளிப்படுத்தக்கூடியவர் நாகேஷ். திருவிளையாடல் தருமி, தில்லானா மோனாம்பாள் வைத்தி, சர்வர் சுந்தரம் சுந்தரம், எதிர்நீச்சல் மாதுன்னு அவர் நடிச்ச எந்த கதாபாத்திரத்துலயும் வேற யாரையும் பொருத்திப் பார்க்கவே முடியாது.
பாலச்சந்தர் படப்பிடிப்புல ரஜினியோ கமலோ ஒழுங்கா நடிக்கலன்னா இன்னேரம் ராவ்ஜி இருந்திருந்தா எப்படி நடிச்சிருப்பான் தெரியுமான்னு திட்டுவாராம் பாலச்சந்தர். அந்த அளவுக்கு பாலச்சந்தருக்கும் நாகேஷுக்கும் நட்பு இருந்துது. என்னுள் இயங்காத நடிகன் நாகேஷ், நாகேஷின் உள் இயங்காத எழுத்தாளன் நான்னு பாலச்சந்தரே சொல்லியிருக்கிறாரு. எஸ்.வி.சுப்பையா, சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் நடிச்ச பாரதியார் வேடத்த நாகேஷுக்கு கொடுத்து அழகு பார்த்தாரு பாலச்சந்தர். இருகோடுகள் திரைப்படத்துல வர்ற பாரதியாரைப் பார்க்கும்போது ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்படும்.
அதே மாதிரி நாகேஷோட நடிப்பு மட்டுமில்லாம அவரோட நடனத்துக்கும் தனி மவுஸு உண்டு. அவளுக்கென்ன அழகிய முகம், தாமரைக்கன்னங்கள், மலர் என்ற மனமென்று.., கல்யாண சாப்பாடு போடவான்னு சொல்லிகிட்டே போகலாம்.
உனக்கு புடிச்சத வச்சிக்கோ ரிட்டைர்மெண்ட் வயசுனாபிறகு நாகேஷ் நடிச்ச கதாபாத்திரங்களும் எவர்க்ரீன் தான். அபூர்வ சகோதரர்கள் படத்துல வில்லனா நடிச்சு மிரட்டியிருந்தாலும், அப்புக் கமலை பார்க்கும்போது ஸ்கிரிப்ட்லயே இல்லன்னாலும் என்னடா பாதிதான் இருக்குன்னு ஸ்பாட்ல ஜோக்கடிப்பார். பூவே உனக்காக படத்துல கோபக்கார கிழவரா இருக்கிறது, வசூல்ராஜாவுல தன்னோட மகன் உண்மையான டாக்டர் இல்லன்னு தெரிஞ்சு மனம் நொறுங்கிப்போறது, அவ்வை ஷண்முகியில மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சதுன்னு சொல்லிகிட்டே போகலாம். பஞ்ச தந்திரம் படத்துல யோவ் பெருசு… இந்த வயசுல குடிக்கிறியேன்னு போலீஸ் கேக்கும்போது… இந்த வயசுல குடிக்கலன்னா குடிக்கவே முடியாதேன்னு சொல்வாரு. அதுதான் நாகேஷ். எப்பவும், எப்படி எல்லாரையும் சந்தோஷப்படுத்தனும்னு யோசிச்ச கலைஞன்.,
பஞ்ச தந்திரம் தனக்கு முதல் குழந்தை பிறந்தப்போ குழந்தையை பாக்கப் போகாம தொடர்ச்சியா நடிச்சிகிட்டே இருந்தாராம். குழந்தையை போயி பாக்கலயான்னு கேட்டதுக்கு, அம்மைத் தழும்போட இருக்க இந்த முகத்த வச்சிகிட்டு நான் போயி குழந்தைய பாத்தா பயந்துடாதுன்னு கேட்ட நாகேஷ்தான், அவர பாக்குற நினைக்கிற எல்லாருடைய முகத்திலேயும் விலைமதிப்பில்லாத சிரிப்ப பரிசா கொடுத்திருக்கிறாரு.
தேசிய விருது, கலைமாமணி விருதுன்னு பல கௌரவங்களுக்கு நாகேஷ் சொந்தக்காரன்னு சொல்றதவிட அந்த விருதுகளுக்கு நாகேஷால பெருமை சேர்ந்திருக்கிறதுன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். தமிழ் மண்ணின் மைந்தனான மகா கலைஞன் நாகேஷோட பிறந்தநாள்ல அவர வணங்கி மகிழ்கிறது ஜெ சினிமா.