சீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக கணவர் நாற்காலியாக மாறிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது, அது பற்றிய தொகுப்பு
கணவன் மனைவி உறவுகளின் அன்பை அளவிட முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாக சீனாவில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஒருவர், தன் கர்ப்பிணி மனைவியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவருக்காக காத்திருந்தபோது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு கால் வலிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், அங்கு அதிகக் கூட்டமாக இருந்ததால் நாற்காலிகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்டன. கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழுந்து இடம்தர யாரும் முன் வரவில்லை. தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதைக் கவனித்த அவரது கணவர், உடனே தரையில் மண்டியிட்டுத் தன்னை ஒரு நாற்காலி போல் மாற்றி முதுகில் மனைவியை அமர வைத்துக் கொண்டார். மனைவியின் சோர்வை அறிந்து குடிப்பதற்கு நீரும் தருகிறார். அப்போதும் கூட அந்த கர்ப்பிணிப் பெண் அமருவதற்கு யாரும் இடம் தரவில்லை.
இந்த நிகழ்வை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் மனைவிக்கு நாற்காலியாக மாறிய கணவரின் இந்த செயலை இணைய வாசிகள் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், அந்தப் பெண்ணுக்காக எழுந்து இடம் தராதவர்கள் மீது கடும் விமர்சனத்தையும் வைத்து வருகின்றனர் இணைய வாசிகள். இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இடையே புரிதல் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகள் வரும் நிலையில், சீனாவில் நடந்த இந்த நிகழ்வு கணவன் மனைவி இடையே புரிதல் வேண்டும் என்பதை கூறும் விதமாக அமைந்துள்ளது.