50 ஆண்டுகளாக நாட்டுப்புறப்பாடல் பாடிவரும் மூதாட்டி

சேத்தியா தோப்பு அருகே 65 வயது மூதாட்டி ஒருவர், கடந்த ஐம்பது ஆண்டுகளாக சொந்தமாக மெட்டமைத்து நாட்டுப்புறப்பாடல்களைப் பாடி வருகிறார்…..

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ள பொன்னங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் நீலாவதி பாட்டி. 65 வயதாகும் இவர், தற்போது அனைவராலும் திரும்பி பார்க்கப்படும் நபராக மாறியிருக்கிறார்.

அதற்கு காரணம், சில தினங்களுக்கு முன் நீலாவதி பாட்டியின் உறவினர் ஒருவர், அவர் பாடிய சில நிமிட பாடல்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவானது அனைவரது பாராட்டுகளையும் பெற்று, அதிகமாக பகிரப்பட்டு வருகிறது…

இதுகுறித்து பேசிய நீலாவதி பாட்டி, கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கூலிவேலைக்கு செல்லும்போது, வேலையில் அலுப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடல் பாடிவருகிறேன் என்று குறிப்பிட்டார்.மேலும், துப்புரவு பணியாளரான இவர், வீட்டுக்கொரு கழிவறை வேண்டும் என்பதை வலியுறுத்திப் பாடிய விழிப்புணர்வு பாடல், சமூகவலைதளங்களில் எல்லோராலும் விரும்பப்பட்டுள்ளது.எவ்விதமான கல்வியறிவும் இல்லாமலும், யாரிடமும் பாடல் கற்காமலும் இவ்வளவு தெளிவாகவும் அழகாவும் பாடும் நீலாவதி பாட்டி, தற்போதும், புதுவை வானொலி நிலையத்தில் அவர்கள் அழைக்கும்போது சென்று பாடிவிட்டு வருவதாகக் கூறுகிறார்.

மேலும் இதுபோலவே, இவர் திருச்சி வானொலியிலும், பலமுறை மேடைகளில் பாடியுள்ளதாகவும் தெரிவிக்கிறார். இளம் வயதிலேயே கணவரை இழந்துவிட்ட இவர், தனக்கு தெரிந்த பாட்டுப்பாடுவதை மட்டும் பொழுதுபோக்காக்கி கொண்டு, கூலி வேலை செய்து வருகிறார்.இவரின் பாடல்களில் சமூக அக்கரை மற்றும் விழிப்புணர்வு அதிகம் கொண்டுள்ளதாக இருக்கிறது.

நாட்டுபுற பாடல், கும்மிப்பாடல் எனப் பாடி அசத்திவரும் நீலாவதி பாட்டியின், பாடல்கள் சமூக அக்கரை மற்றும் விழிப்புணர்வுகளைக் கொண்டுள்ளது.

Exit mobile version