நயவஞ்சகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லாட்சி மீது மக்கள் கொண்டுள்ள பாசத்தை தெளிவுப்படுத்துங்கள் என்று திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுமார் ஒரு கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கியது அதிமுக அரசு என குறிப்பிட்டுள்ளனர். ஏழை எளிய மக்கள் பயன்பெற 100 யூனிட் வரையிலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரையிலும் கைத்தறி நெசவாளர்களுக்கு 250 யூனிட் வரையிலும் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டியிருக்கும் அவர்கள்,
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ஆயிரத்து 652 கோடி ரூபாயில் துவங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிமுக அரசு உருவாக்கியிருப்பதாகவும், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி, உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி ஆகியவற்றையும் அதிமுக அரசு வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைத்தது, 83 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மேட்டூர் அணையை தூர்வாரியது உள்ளிட்டவற்றையும் தெரிவித்துள்ளனர்.
திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கம், 240 கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க மேலூர்-காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்,
ஓட்டப்பிடாரம் தருவை குளத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புயல் புகழிட காப்பகம், சூலூர் மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தியது உள்ளிட்டவற்றை அதிமுக அரசின் சாதனையாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 250 கோடி ரூபாய் செலவில் அரவக்குறிச்சி-பரமத்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், கோவை கண்ணம்பாளையத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை உருவாக்கத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
நயவஞ்சகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லாட்சி மீது மக்கள் கொண்டுள்ள பாசத்தை தெளிவுப்படுத்துங்கள் என சூலுர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.