திருவண்ணாமலை மாவட்டம் மொடையூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிற்பக்கலை தொழிலில் சிறந்து விளங்குகின்றனர்
இவ்வூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக மாவுக்கல்லைப் பயன்படுத்தி சிற்பக்கலை பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக மொத்த கிராமமுமே சிற்பங்கள் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் செய்யும் சிற்பங்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கருங்கல், பச்சைக்கல், மாவுகல் ஆகியவற்றைக் கொண்டு 1/2 அடி முதல் 30 அடி வரையுள்ள சாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், விலங்குகளின் சிலைகள் மற்றும் கோவில் சிற்பங்களையும் செதுக்கி வருகின்றனர்.
இவர்கள் செய்யும் சிலைகளில், ஒரு அடி அளவுள்ள சிலையானது 2 ஆயிரம் ரூபாய்க்கு தொடங்கி உயரத்திற்கேற்ப 8 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இத் தொழிலில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கிராம மக்கள், சிலைகள் செதுக்க தேவையான கற்களை பல மாவட்டங்களிலிருந்தும் வாங்கி வருகின்றனர்.
மேலும், இந்தத் தொழிலில் செலவினங்கள் போக ஒரு மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக சிற்பக்கலைஞர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இப்பகுதி சிற்பக்கலை கலைஞர்களுக்கு அரசு மாநில விருது, தேசிய விருது ஆகியவற்றை வழங்கி கெளரவித்துள்ளது.
நலிந்துவரும் சிற்பகலைக்கு மீண்டும் உயிர் கொடுக்க, அரசு முன்வந்தால் தங்கள் தொழில் மேலும் வளர்ச்சியடையும் என்று சிற்பக் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.