பாமியான் மாகாணத்தில் சோவியத்-ஆப்கான் போரின்போது தலீபான் பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இரண்டு பெண்கள் ஈடுப்பட்டுள்ளனர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே 18 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இவர்களுக்கு இடையேயான போரில் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் தலீபான் பயங்கரவாதிகள், காவல்துறை மற்றும் ராணுவ வீரர்களைக் குறி வைத்துக் கண்ணிவெடித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்தக் கண்ணிவெடித் தாக்குதல்களில் அதிகம் பாதிக்கப்படுவோர் அப்பாவி மக்களே.
மேலும் பாமியான் மாகாணத்தில் சோவியத்-ஆப்கான் போரின்போது தலீபான் பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. உயிர்ப்புடன் இருக்கக்கூடிய இந்தக் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பாத்திமா அமீரி மற்றும் பிசா ஆகிய இரண்டு பெண்கள் இறங்கியுள்ளனர்.
மலைப் பகுதிக்குச் சென்ற இளைஞர் ஒருவர் கண்ணி வெடியால் உயிரிழந்ததாகவும், அந்த இளைஞரின் பிரிவால் வாடும் குடும்பத்தைப் பார்த்துத் தான் கண்ணிவெடிகளை அகற்றும் குழுவில் இணையவேண்டும் என்ற எண்ணம் தனக்கு வந்ததாகவும் பாத்திமா அமீரி தெரிவித்தார்.
அதே போல் இந்தப் பணியில் ஈடுபடவேண்டாம் எனத் தனது தாயும், மாமியாரும் அறிவுறுத்தியும், சவாலான பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் இதைச் செய்வதாக பிசா கூறினார்.
பாமியான் மாகாணத்தைக் கண்ணி வெடிகளற்ற பகுதியாக்குவதே தங்களது நோக்கம் எனக் கூறும் இந்த பெண்கள் , தினமும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிக்காக இரண்டு மணி நேரம் செலவிட்டு வருவது குறிப்பிடத் தக்கது.