இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது, 24,22,00,000 ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். மேலும், 70,55,00,000 ரூபாய் மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இராமநாதபுரம் மாவட்டத்தில் 48 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார். பரமக்குடி – சூடியூர் பகுதியில் 8,50,00,000 ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இராமேஸ்வரத்தில் 30,96,00,000 ரூபாய் மதிப்பில் யாத்ரீகர்கள் தங்கும் இடம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மானிய விலையில் படகுகளை வாங்குவதற்கான மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப்பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.