பறக்கும் தீவிரவாதிகள்;பதறும் விவசாயிகள் – கட்டுபடுத்த முடியாமல் திணறும் அரசுகள்!

வட இந்திய மாநிலங்களை மிரட்டி வரும் வெட்டுக்கிளி படையெடுப்பால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அச்சத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். 

நாடே கொரோனாவால் ஸ்தம்பித்துள்ள நிலையில் வட இந்திய மாநிலங்களை மீண்டும் சூறையாட தொடங்கியுள்ளன வெட்டுக்கிளிகள்… ஆண்டுதோறும் பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுவார்கள் ராஜஸ்தான் விவசாயிகள். இதேபோல் இந்த ஆண்டும் விவசாயிகளை திக்குமுக்காட செய்துள்ளன லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள்…

இந்த வெட்டுக்கிளி படை ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் வந்து இறங்கினால், அவை ஒரே நாளில் சுமார் 35 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவிலான தாவரங்களை துவம்சம் செய்துவிடும் என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்..இதனால் வெடி வெடித்தும், தகரம், அலுமினிய பொருட்களை தட்டி ஒலி எழுப்பியும் இவற்றை விரட்டி வருகின்றனர் விவசாயிகள். ராஜஸ்தான் அரசு சார்பில் பூச்சி மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்க முயற்சி செய்தாலும் இவை கட்டுக்குள் வருவது போல் தெரியவில்லை.

முதலில் எல்லையோர கிராமங்களை அச்சுறுத்தி வந்த வெட்டுக்கிளிப்படை தற்போது ஜெய்பூரை வட்டமிட்டு விவசாய பயிர்களை சூறையாடி வருகிறது. வீடுகளின் முகப்பிலும், மொட்டை மாடிகளிலும் வெள்ளம்போல் சூழ்ந்துள்ள வெட்டிக்கிளிகளை கண்டு பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.மேலும், ராஜஸ்தான் தவிர்த்து உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் இவை தாக்குதலை தொடங்கியுள்ளதால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன அம்மாநில அரசுகள்..

தினமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை நாசப்படுத்தும் இந்த வெட்டுக்கிளிகளால் கடந்த ஆண்டே பெருமளவு மகசூல் பாதிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் சூழலில் இந்த திடீர் வெட்டுக்கிளி படையெடுப்பு அவர்களை மேலும் கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version