பறக்கும் தீவிரவாதிகள் ; உணவு பஞ்சம் ஏற்படுமா?

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி வருகின்றன. சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளை படையெடுக்க செய்து, எதிரி நாட்டு வயல்களை பாலைவனமாக்குவதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கும். 

இந்த காட்சிகளை நிஜமாக்கும் சம்வங்கள் வட இந்திய மாநிலங்களில் நிகழ்ந்து வருகின்றன. வெட்டுக்கிளிகளில் மிகவும் ஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் சுமார் 8 கோடி வெட்டுக்கிளிகள் சூழ்ந்து விவசாய பயிர்களை படுநாசமாக்கி விடும்.

Locust எனும் பாலைவன வெட்டுக்கிளிகளின் பூர்விகம் ஆப்ரிக்க நாடுகள்… நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பருவ மழைக்கு பிந்தைய பசுமையான வயல்களில் இக்கூட்டம் பல்கி பெருகியது. அங்கிருந்து ஏமன் சவுதி அரேபியா வழியாக ஈரானுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் அங்கு பலத்த சேதத்தை விளைவித்தன. அங்கிருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவி இம்மாத தொடக்கத்தில் எல்லை தாண்டி ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளன. வழக்கமாக இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு பாகிஸ்தானை ஒட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டுமே இருக்கும்.. ஆனால், இந்த ஆண்டு ஜெய்ப்பூரை கடந்து உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா வரை ஊடுருவியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 5 வட இந்திய மாநிலங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை நாசம் செய்துள்ள இந்த பறக்கும் தீவிரவாதிகளால் கவலையில் ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள்.

வயல்வெளிகளில் போதுமான பயிர்கள் கிடைக்காததால் வீதிகளிலும் வீடுகளிலும் கூட இவை கூட்டம் கூட்டமாக பரவிக்கிடக்கின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 வாரங்கள் மட்டுமே உயிர்வாழும் வெட்டுக்கிளிகள் அதன் எடையை விட அதிகளவிலான தாவரங்களை உட்கொள்ளும்.. பெரும்பாலும் இவைகள் தனிமையில் தான் வாழும். ஆனால் கால நிலை வறண்டுபோனால் கூட்டம் கூட்டமாக சேர்ந்து படையெடுப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாலையில் இனப்பெருக்கம், வெயிலில் கூட்டாக படையெடுப்பு, இதுதான் வெட்டுக்கிளிகளின் வாழ்க்கை. 27 ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில் நிகழ்ந்த வெட்டுக்கிளி தாக்குதல் பெரும் போராட்டத்திற்குபின் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகள் இருந்தும் இவற்றை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக மாறி வருகிறது. ஒரு வெட்டுக்கிளி படை சில மாதங்களுக்கு மேல் எந்த பகுதியில் தங்கினாலும் அங்கு நிச்சயம் உணவுப்பஞ்சம் ஏற்படும் என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே விவசாய பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலும் அதிகரித்துவருவதால் இந்தியாவில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் உருவாகியுள்ளது.

Exit mobile version