தனது நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி வழங்கி உள்ளது.
புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் தொடுத்தன. இதையடுத்து பாகிஸ்தான் வான்வழி பகுதி பிப்ரவரி மாதம் 26ம் தேதி மூடப்பட்டது. இதனால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்து வருகின்றன. அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியின் சிறப்பு விமானமும் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்த்து சுற்றிச் சென்றது. இந்தநிலையில், இந்திய விமானங்கள் தனது வான் எல்லையில் பறக்க பாகிஸ்தான் அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் இருநாட்டு நல்லுறவு மேம்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.