மலர் கண்காட்சியை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகள் அடுக்கும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது, ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை தருவது வழக்கம். மேலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் உதகையில் ஆண்டு தோறும் மே மாதத்தில் பல்வேறு விழாக்கள் சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில், முக்கிய விழாவாக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மலர் கண்காட்சி வரும் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், 35 ஆயிரம் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிட்டடோனியா, சால்வியா, பேன்சி, லில்லியம், பெகுனியா உள்ளிட்ட செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மலர் கண்காட்சிக்கு மூன்று தினங்களே உள்ள நிலையில், அலங்கார மேடையில் பூந்தொட்டிகள் அடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.